
புத்ரா ஜெயா, மே 20 – 60 வயதுக்குப் பிறகும் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து சுறுப்பாகவும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டுமென சட்ட மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் அஷாலினா ஒத்மான் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். நடப்பு சமூக போக்கு மற்றும் தனது கண்காணிப்பின் மூலம் இது தனது சொந்த கருத்தாக இருப்பதாக அவர் கூறினார். நாங்கள் சந்திக்கும் சில அதிகாரிகளுக்கு 60 வயதாகிவிட்டபோதிலும் அவர்கள் இன்னமும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றனர். அவர்கள் இன்னமும் வேலை செய்ய முடியும் என்பதால் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு அனுமதிப்பது நன்றாக இருக்காது என இன்று ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறந்த சேவை மற்றும் ஓய்வு விருதை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அஷாலினா தெரிவித்தார்.
மலேசியாவில் 60 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் மக்கள் தொகையில் 11.1 விழுக்காட்டினராக இருப்பதாகவும், இந்த விகிதம் 2030 ஆம் ஆண்டில் 15 விழுக்காடாக ஆக உயரும் என்றும், இதனால் மலேசியா வயதானவர்களின் நாடாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், மலேசியா பொது மற்றும் தனியார் துறைகளுக்கு ஓய்வு பெறும் வயதை முறையே 58 மற்றும் 55 இல் இருந்து 60 ஆக உயர்த்தியது. இந்த நடவடிக்கை ஆரோக்கியமான, சுறுசுறுப்பான முதுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில் முதியவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மற்ற தொழில்கள் மற்றும் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மலேசியாவில் உள்ள நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள், அவர்களின் ஓய்வு பெறும் வயதை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அசாலினா சுட்டிக்காட்டினார்.