
டாக்கா, செப்டம்பர் -21 – வங்காளதேசத்திற்குள் தங்கத்தைக் கடத்தியக் குற்றத்திற்காக ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 2 மலேசியர்கள், சிறைவாசம் முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும் விரைவிலேயே தாயகம் திரும்புவர் என, வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலம் நெடுகிலும் இருவருக்கும் தேவையான தூதரக உதவிகளை, டாக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தின் வாயிலாக வழங்கி வந்ததாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.
மரண தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு, தங்கக் கடத்தல் வங்காளதேசத்தில் கடும் குற்றமாகக் கருதப்படுகிறது.
எனவே வெளிநாடு செல்லும் மலேசியர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதோடு, அந்தந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமென அமைச்சு அறிவுறுத்தியது.