
பத்து மலை, பிப்ரவரி-13 – பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கு தாராள குணத்தோடு 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியதற்காக, பிரதமருக்கும் ஒற்றுமை அரசாங்கத்துக்கும் சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மனமார நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா ஆகியோர் முயற்சியில், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அண்மைய பத்து மலை வருகை அதனைச் சாத்தியமாக்கியுள்ளது.
மலேசிய இந்தியர்களின் நலன் காக்கும் பிரதமரின் கடப்பாட்டை இது மறு உறுதிப்படுத்தியிருப்பதாக, குணராஜ் சொன்னார்.
பத்து மலை ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு முக்கியத்துவத்தைக் கொண்ட கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளமாகும்.
பிரதமரின் இச்சிறப்பு நிதி ஒதுக்கீடானது, பத்து மலையின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைபுரியும்;
இது சமய, கல்வி மற்றும் சமூக நல முயற்சிகளுக்கான மையமாக தொடர்ந்து செயல்படுவதையும் உறுதி செய்யும் என்றார் அவர்.
கல்வி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் முதல் கலாச்சார பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகள் வரை, ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது; எடுத்தும் வருகிறது.
சிறு வணிக மானியங்கள், வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றுக்கான அதிக ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இது போன்ற முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியச் சமூகமும், பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கான வற்றாத ஆதரவைத் தொடருவதன் மூலம் மேலும் ஏராளமான அனுகூலங்களை அனுபவிக்கலாமென, அறிக்கையொன்றில் குணராஜ் தெரிவித்தார்.