
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – இனவெறியைத் தூண்டும் வகையிலான அறிவிப்பை வைத்து சர்ச்சைக்குள்ளான செப்பாங் சாலையோர சோள வியாபாரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து மலேசியர்கள் குறிப்பாக மனம் புண்பட்ட இந்தியர்களிடம் அவர் மன்னிப்புக் கோரினார்; அப்படி மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் (Datuk Aaron Ago Dagang) தனது X தளத்தில் அதனைத் தெரிவித்தார்.
நேற்று செப்பாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் அந்த மன்னிப்புக் கேட்கப்பட்டது.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஊடகப் பிரபலங்கள், உள்ளூர்வாசிகள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோரும் அதில் கலந்து கொண்டனர்.
ருக்குன் தெத்தாங்கா தலைவர்கள் Roseman, Syawal இருவரும் மத்தியஸ்தம் செய்து இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் சொன்னார்.
சமூகத்தில் ஒற்றுமையை நிலை நாட்டிடவும் மோதல்களைத் தீர்க்கவும் ருக்குத் தெத்தாங்கா நல்ல ஏஜண்டாக செயலாற்ற முடியும் என்பதற்கு இதுவே சான்று;
இது ஓர் இணக்கமான மற்றும் அமைதியான சூழலைப் பாதுகாப்பதில் சமூகத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது என்றார் அவர்.
வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்களிடையே நமது வார்த்தைகளும் செயல்களும் அசௌகரியம், பதற்றம் அல்லது தவறான புரிதலை ஏற்படுத்தாமல் இருப்பதை நாம் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் டத்தோ ஏரன் வலியுறுத்தினார்.