
பத்து காவான், செப்டம்பர்-30,
பினாங்கு பத்து காவான் தொழிற்சாலைப் பகுதியில் நேற்று அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
40 மீட்டர் உயரமுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் பராமரிப்பு பணியிலிருந்த 29 வயது பாகிஸ்தானியத் தொழிலாளர், திடீரென தேனீக்கள் சூழ்ந்ததால் இறங்க முடியாமல் மேலேயே சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உடனடியாக சம்பவ இடம் விரைந்தது.
கோபுரத்தின் நான்காவது தளத்திலிருந்த தொழிலாளர் இறங்க முயன்றபோது, 25 சென்டி மீட்டர் அளவுள்ள பெரிய தேனீ கூடு ஒன்றிலிருந்து தேனீக்கள் பறந்து வந்து முதல் தளத்தை முற்றுகையிட்டதால் அவர் பதற்றத்தில் அங்கேயே நின்றுவிட்டார்.
தீயணைப்புக் குழு முழு பாதுகாப்புஉபகரணங்கள் அணிந்து, கயிறு வழியாக ஒரு insect-proof அதாவது பூச்சிகள் துளைக்காத ஜேக்கேட்டை மேலே அனுப்பியது.
அதைப் பயன்படுத்திக்கொண்ட பிறகு, தொழிலாளர் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக இறங்கி வந்தார்.
பின்னர், பூச்சிக் கட்டுப்பாட்டு குழு தேனீக்கூட்டத்தை அகற்றியது.
சரியான நேரத்தில் வந்த உதவியால் ஒரு பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.



