
கோலாலம்பூர், ஜனவரி 23 – பிப்ரவரி 11 தைப்பூசத் திருநாளுக்கு கெடா மாநில அரசு சம்பவ விடுமுறை வழங்கியிருப்பதை, MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின்
பேரவை வரவேற்றுள்ளது.
தைப்பூசத்தை கொண்டாடும் இந்துக்களின் சமய நம்பிக்கை, கலாச்சாரத்தை மதிக்கும் வகையிலும், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணவும் எடுத்துள்ள அம்முடிவுக்காக நன்றிக் கூறுவதாக, MAHIMA தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறியுள்ளார்.
சம்பவ விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால், இந்துக்கள் அன்றைய நாளில் குடும்பத்தோடு தமிழ்க் கடவுளாம் முருகனை வழிப்பட்டு அருளாசிப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெதிவித்தார்.
இதனிடையே, சம்பவ விடுமுறை வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே என்றாலும், அது மாநில பொது விடுமுறையாக மாற்றப்பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.
அதற்கு மந்திரி பெசார் சனுசி ஆவனம் செய்ய வேண்டும்; அடுத்தடுத்த ஆட்சிக் குழுக் கூட்டங்களில் அவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு, ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாக டத்தோ சிவகுமார் நம்பிக்கையுடன் கூறினார்.
மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி நோர் தலைமையிலான மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தைப்பூசத்திற்கு கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் சிலாங்கூரில் மாநில பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.