
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27 – 8 ஆண்டுகளுக்கு முன் லிம் குவான் எங் பினாங்கு முதல்வராக இருந்த போது, கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்திற்காக அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட்டை ரொக்கமாகக் கொடுத்ததாக, பிரபல தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2017 ஆகஸ்ட் 18-ஆம் தேதி Mont Kiara-வில் 1 மில்லியன் ரிங்கிட்டையும், எஞ்சிய தொகை, 11 நாட்கள் கழித்து குவான் எங் தன்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த போது கொடுத்ததாகவும் அவர் சொன்னார்.
கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விஷயங்களைக் கையாள “ஒரு நிறுவனம் மற்றும் வங்கிக் கணக்கை அமைப்பது” குறித்து விவாதிப்பதே குவான் எங் வருகையின் நோக்கமாக இருந்தது என ஞானராஜா கூறினார்.
குவான் எங்கை காரில் ஏற்றி வந்த தொழிலதிபர் Datuk Zarul Ahmad Zulkifli-யுடம் அச்சந்திப்பில் பங்கேற்றார்; அப்போது, அந்த சுரங்கப்பாதை திட்டத்தில் 10 விழுக்காட்டு பங்குகளைத் தருமாறு தான் முன்வைத்த விண்ணப்பத்தை Zarul ஒப்புக் கொண்டதாக குவான் எங் கூறியதாகவும் ஞானராஜா சொன்னார்.
தங்களுக்கு இடையிலான அந்த ‘முக்கியச்’ சந்திப்பு 3 மணி நேரங்கள் வரை நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டத்தின் லாபத்தில் 10% பங்கைப் பெறுவதற்க பினாங்கு முதல்வர் பதவியைப் பயன்படுத்தி Zarul-லிடமிருந்து RM3.3 மில்லியன் லஞ்சம் பெற்றதாக லிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதோடு, RM208.7 மில்லியன் மதிப்புள்ள அரசு நிலத்தை நேர்மையற்ற முறையில் கையகப்படுத்தியதாக கூடுதலாக 2 குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.