
செந்தூல், ஜனவரி-11, டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்கும் கூடுதல் உத்தரவை டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் ‘மூடி மறைத்ததாக’ குற்றம் சாட்டியுள்ள கைரி ஜமாலுடின் மீது, போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி மீது, அசாலீனாவின் அரசியல் செயலாளர் சுராயா யாக்கோப் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கைரியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதோடு, சட்ட சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது.
எனவே, கைரியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைரியும், அம்னோ தகவல் பிரிவின் முன்னாள் தலைவர் ஷாரில் ஹம்டானும் இணைந்து வழங்கி வரும் ‘Keluar Sekejap’ போட்காஸ்ட் உரையாடலின் போது, கைரி அக்குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
சட்ட அமைச்சர் என்ற வகையில் அசாலீனாவுக்குத் தான் அக்கூடுதல் உத்தரவு குறித்து அதிகம் தெரிந்திருக்க வேண்டும்; ஆக அதனை மறைக்கும் ‘கூட்டுச் சதியில்’ அவர் ஈடுபட்டுள்ளார் என்ற தோரணையில் கைரி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
SRC International ஊழல் வழக்கில் நஜீப்பின் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பாதியாகக் குறைத்த 16-வது பேரரசர், எஞ்சிய தண்டனைக் காலத்தையும் நஜீப் வீட்டுக் காவலில் கழிக்க கூடுதல் உத்ரவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதனை அமுல்படுத்தாமல் அரசாங்கம் அவ்வுத்தரவை மூடி மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அரசாங்கம் அதனை பல முறை மறுத்து விட்ட நிலையில், நஜீப் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
அப்படியொரு கூடுதல் உத்தரவு உண்டா இல்லையா என்பது குறித்து விசாரிக்குமாறு அவர் செய்துள்ள விண்ணப்பம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.