
மலாக்கா, அக்டோபர்-12, வட்டி முதலைகளிடம் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, சொந்த குடும்பத்திடமே கடத்தல் நாடகமாடிய மாது மலாக்காவில் கைதாகியுள்ளார்.
நேற்று முன்தினம் காணாமல் போன 55 வயது அம்மாது, தாம் கடத்தப்பட்டிருப்பதாகவும், கடத்தல்காரர்கள் 70,000 ரிங்கிட்டைப் பிணைப்பணமாகக் கேட்பதாகவும் மகனின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதற்கு முன்பாக peringgit-டிலுள்ள சூப்பர் மார்கெட்டில் தம்மை கொண்டு விடுமாறு மகனிடம் கேட்டவர், கைப்பேசி கட்டணத்தைச் செலுத்தப் போவதாகக் கூறி காணாமல் போனார்.
இந்நிலையில், ஜோகூர், மூவாரில் உள்ள எண்ணெய் நிலையமொன்றின் பள்ளிவாசல் அருகே நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அம்மாது போலீசிடம் சிக்கினார்.
மலாக்கா சென்ட்ரலிலிருந்து மூவாருக்கு பேருந்தில் பயணமானவர், கையிலிருந்த பணம் தீர்ந்துபோனதால் அந்த பள்ளிவாசலில் அடைக்கலம் பெற்றார்.
10 வட்டி முதலைகளிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வேறு வழி தெரியாததால், அக்கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து விசாரணைக்காக 6 நாட்களுக்கு அவர் தடுத்து வைக்கப்பட்டார்.