
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-2 – 239-ஆவது ஆண்டாக பிப்ரவரி 11-ல் நடைபெறவிருக்கும் பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசத்தில் 1.5 மில்லியன் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு 1 மில்லியன் பேர் திரண்டனர்.
பள்ளி விடுமுறை என்பதால் இவ்வாண்டு அதை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர், நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் வருகின்றனர்.
எனவே, தைப்பூசத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.
பினாங்கின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இச்சமய பெருவிழா சுமூகமாக நடந்திட ஏதுவாக, தேவஸ்தானமும் சம்பந்தப்பட்ட குழுவினரும் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வருவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், தைப்பூசத்தை முன்னிட்டு தங்க இரதம் லெபோ குவீனில் இருக்கும் மகா மாரியம்மன் கோவிலிலிருந்து பிப்ரவரி 10 காலை 6 மணிக்குப் புறப்படும்.
தண்ணீர் மலை ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தை மறுநாள் சென்றடையும்.
பிறகு, மகா மாரியம்மன் ஆலயத்தை நோக்கி பிப்ரவரி 12-ல் திரும்பி மறுநாள் கோயிலை சென்றடையும் என்றார் அவர்.