
செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க, அதன் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
அக்குற்றச்சாட்டை கடுமையாகக் கருதுவதாக UPM அறிக்கையொன்றில் கூறியது.
விலங்குகள் குறிப்பாக குறிப்பாக சாலைகளில் சுற்றித் திரியும் பிராணிகளின் மேலாண்மை தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பொறுப்பாக, நெறிமுறையாக மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்படுவதை உறுதிச் செய்வதில் UPM உறுதிபூண்டுள்ளது
எனவே, நடந்ததாகக் கூறப்படும் அச்சம்பவங்களை, விசாரணைக் குழு விரிவாக விசாரித்து அறிக்கை வழங்கும்.
UPM வளாகத்திற்குள் இதுபோன்ற செயல்களுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்படாது என்றும் அவ்வறிக்கை வலியுறுத்தியது.
முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் குழுவான Peka, UPM பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் இவ்வாண்டின் முற்பகுதியிலும் 18 நாய்களையும் 5 நாய்க்குட்டிகளையும் அதன் வளாகத்தில் கொன்றதாக குற்றம் சாட்டியது.
வளாகத்திற்குள் இறந்து கிடந்த நாய்கள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதாகவும், பல்கலைக்கழக ஊழியர்கள் நாய்க்குட்டிகளுக்கு விஷம் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் Peka அம்பலப்படுத்தியது.
அதோடு சடலங்கள் campus வளாகத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் கூறிய அவ்வமைப்பு, 20 முதல் 30 தெருநாய்களைக் கொன்றதற்கான வெளி நிறுவனத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒரு விலைப்பட்டியலையும் மேற்கோள் காட்டியது.
இக்குற்றச்சாட்டு குறிப்பாக விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.