
கோலாலம்பூர், நவ 12 – தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியில்
பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்கினியன் மரபு கவிதை போட்டியின் பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் புதிய வளாக மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் அண்மையில் நடைபெற்றது, மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்போட்டி ஏழாவது முறையாக நடத்தப்பட்டது.
நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப்பெயரான நல்லார்க்கினியன் பெயரில், பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்களின் பெரும் முயற்சியில் இப்போட்டி நடத்தப்படுகிறது என ஏற்பாட்டுக்குழுத் தலைவர் கீதரசன் சுந்தரேசன் தமதுரையின்போது குறிப்பிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப்புரிந்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த விழாவை தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு லட்சம் ரிங்கிட் நன்கொடை வழங்கியதற்காக அவருக்கு கீதரசன் சுந்தரேசன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கம்பனையும், பாரதியையும் இன்றும் கொண்டாடுகிறோம் என்றால் அவர்களின் வரிகள் ஆழமானவை, அர்த்தம் நிறைந்தவை என்றும் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சமுதாயத்தில் சிந்தனைப் புரட்சி உருவாக வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக நமது நாட்டில் மரபு கவிதை மேம்பாட்டிக்காக உழைத்த ஐந்து மூத்த கவிஞர்களான கருமுத்து சொக்கநாதன், கவிஞர் பங்சார் எ.அண்ணாமலை, கவிஞர் அம்பிகாபதி மாணிக்கம், கவிஞர் அருள் ஆறுமுகம் கண்ணன், கவிஞர் எம்.ஆர். தனசேகரன் ஆகியோர் மரபு கவிதை மேம்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக விருதளித்து கெளரவிக்கப்பட்டனர்.
மரபுக் கவிதைப் போட்டி மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. அதில் மாணவர் பிரிவு முதல் நிலை வெற்றியாளராக துர்காஷினி முருகனும், இளையோர் பிரிவில் சரண் சுக்லாம் ஆத்மலிங்கமும், பொதுப் பிரிவில் கவிஞர் அமிர்தலட்சுமி பத்துமலையும் வாகை சூடினர். இவர்களுடன் மூன்று பிரிவிலும் 12 பேர் ஊக்கத்தொகை பரிசையும் வென்றனர்.



