WHO-விலிருந்து அமெரிக்கா விலகல்; முதல் நாளிலேயே அதிரடி காட்டும் டோனல்ட் டிரம்ப்
வாஷிங்டன், ஜனவரி-21, அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே டோனல்ட் டிரம்ப் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளையும் உத்தரவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, உலக சுகாதார நிறுவனமான WHO-விலிருந்து அமெரிக்கா வெளியேறவிருப்பதாக அவர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.
அமெரிக்காவிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு, கோவிட்-19 பெருந்தொற்று உட்பட அனைத்துலக சுகாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் WHO தோல்வி கண்டுள்ளது.
அதோடு சில உறுப்பு நாடுகளின் தவறான அரசியல் தாக்கத்திற்கு ஆளாகி, அதிகக் கட்டணம் விதித்து அமெரிக்காவை WHO வஞ்சித்துள்ளது.
இப்படியொரு சூழ்நிலையில் WHO-வில் அங்கம் வகிப்பது ஏற்புடையதாக இல்லையெனக் கூறி, டிரம்ப் ஆணையில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, ஐநாவின் கீழுள்ள WHO அமைப்பிலிருந்து இந்த ஓராண்டில் அமெரிக்கா வெளியேறி விடும்.
அதே சமயம் அதற்கு அளித்து வந்த அனைத்து வகை நிதியுதவிகளையும் அமெரிக்கா நிறுத்துமென டிரம்ப் அறிவித்தார்.
WHO-வின் மொத்த நிதியில் பெரும்பங்கு அமெரிக்காவுடையதாகும்.
சுமார் 18 விழுக்காட்டு நிதி அந்த உலக வல்லரசு நாட்டிடமிருந்துதான் வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றின் பூர்வீகம் குறித்து உலக மக்களையே சீனா ‘முட்டாளாக்குவதாவும்’ அதற்கு WHO துணைப் போவதாகவும் கூறி, தனது முந்தைய ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.