Latestமலேசியா

Wisma Transit-டில் உள்ள பாலஸ்தீனர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றனர் – தற்காப்பு அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி-25 – கோலாலம்பூர் Wisma Transit கட்டடத்தில் தங்கியுள்ள 127 பாலஸ்தீனர்களும் புதிய இடத்திற்கு மாற்றப்படுவர்.

தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

எகிப்துக்குத் திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்களை சீக்கிரமே இடமாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றார் அவர்.

அண்மையில் Wisma Transit வளாகத்தில் பாலஸ்தீனர்கள் ஏற்படுத்திய சலசலப்பானது, 4 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே அடைந்து கிடந்ததால் அவர்களில் சிலருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் வெளிப்பாடாகும்.

அதனை Wisma Transit நிர்வாகம் நல்ல முறையில் கையாண்டது; யாரும் சண்டையிட்டதாகவோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என, மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் கூறினார்.

புதிய இடத்திற்கு மாறுவதன் மூலம், அவர்களின் மன அழுத்தமும் உளைச்சலும் குறையுமென டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Wisma Transit பாதுகாப்பான இடம்; உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஆயுதப் படையின் முன் அனுமதியும் ஒப்புதலும் தேவை என அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த அக்டோபரில் Wisma Transit-டில் உள்ள சில பாலஸ்தீனர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரச்னை செய்தனர்; கடந்த மாதம், தங்களைத் தாயகத்திற்கு அனுப்பக் கோரி அவர்கள் மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Wisma Transit என்பது இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் காயமடைந்து சிகிச்சைக்காக இங்குக் கொண்டு வரப்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் தங்க வைக்கப்பட்டுள்ள இடமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!