
சான் ஃபிரான்சிஸ்கோ, மார்ச்-11 – X தளம் நேற்று பெரிய அளவிலான இணையத் தாக்குதலுக்கு ஆளானதை அதன் உரிமையாளர் இலோன் மாஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
கோளாறை சரி செய்ய முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
திங்கட்கிழமை காலை முதல் மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்காவைச் சேர்ந்த X தள பயனர்களுக்கான சேவை தடைப்பட்ட நிலையில், அது குறித்து முதன் முறையாக அவர் கருத்துரைத்தார்.
எனினும் இது தன்னைக் குறி வைத்து மேற்கொள்ளப்படும் நாசவேலை என அந்த உலக மகா கோடீஸ்வரர் கூறிக் கொண்டார்.
“அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க செயல்திறனை மேம்படுத்தும் துறைக்கு நான் தலைமையேற்றதற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு, பிறகு எனது தெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, இப்போது X தளம் குறிவைக்கப்பட்டுள்ளது” என மாஸ்க் தெரிவித்தார்.
இது போன்ற தாக்குதல்களுக்கு பெரிய வளங்கள் தேவை; ஆக இது நிச்சயமாக ஏதாவது ஒரு வெளிநாட்டின் சதியாக இருக்கும் அல்லது ஒருங்கிணைப்பட்ட ஒரு பெரிய கும்பல் இதன் பின்னாலிருந்து செயல்படக் கூடுமென மாஸ்க் குற்றம் சாட்டினார்.
இணையத் தாக்குதலில் ஈடுபட்ட கணினிகள் யுக்ரேய்ன் நாட்டின் டிஜிட்டல் முகவரியைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்மையில் என்னதான் நடந்தது என்பது குறித்து X ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
அக்குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
எனவே உண்மையிலேயே அவர் குறி வைக்கப்படுகிறாரா அல்லது முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட X தளத்தின் பணியாளர்களை பெருமளவில் அவர் வேலை நீக்கம் செய்ததற்கான பலனை இப்போது அனுபவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.