
கோலாலம்பூர், நவ 12- Zus Coffee தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியருக்கும் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளது.
ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவரது தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் திங்கட்கிழமை போலீஸ் புகார் செய்யப்பட்டதாக அந்த காபி விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீள்வதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர் சம்பளத்துடன் விடுப்பில் இருப்பதோடு , அவர் ஜூஸ் காபி குழுவில் தொடர்ந்து இருப்பதாகவும் அந்த வர்த்தக நிலையம் தெரிவித்துள்ளது.
ஆக்ரோஷமான மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை பொறுத்துக்கொள்ள மாட்டோம், மேலும் எங்கள் கடைகளை சமூகத்திற்காக பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என Zus வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தனது ஊழியர்களின் நல்வாழ்வு ஒரு முதன்மையான முன்னுரிமையாக இருப்பதாக நிறுவனம் கூறியதுடன், சவாலான சூழ்நிலைகளை தொழில் நிபுணத்துவ முறை மற்றும் கனிவுடன் கையாள ஊழியர்களுக்கு உதவும் பயிற்சி மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு ஜூஸ் காபி பொதுமக்களை வலியுறுத்தியது.
இந்த வார தொடக்கத்தில், ஜூஸ் காபி கடையில் ஒரு சுற்றுலாப் பயணி ஒரு பாரிஸ்டாவை நோக்கி கூச்சலிடுவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலானது.சுற்றுலாப் பயணி கவுண்டருக்கு குறுக்கே ஒரு கோப்பை காபியை ஊழியர் மீது வீசுவதையும் அந்த வீடியோவில் காணமுடிந்தது.



