
வாஷிங்டன், செப்டம்பர்-20,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தனது அடுத்த அதிரடியாக இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பெருமளவில் பயன்படுத்தும் H-1B விசா கட்டணத்தை திடீரென 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்த முடிவெடுத்துள்ளார்.
இது தற்போதுள்ள சுமார் ஆயிரம் டாலர் கட்டணத்தை விட பன்மடங்கு அதிகமாகும்.
இது இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுயுள்ளது.
இரண்டாம் தவணையாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பியப் பிறகு குடிநுழைவு விஷயத்தில் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
ஆனால், இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வேலை செய்யும் சிலிக்கோன் பள்ளத்தாக்கு பெரிதும் நம்பியிருந்த இந்த விசாவை ட்ரம்ப் நேரடியாக குறிவைத்துள்ளது இதுவே முதல் முறை.
அமெரிக்கா ஒவ்வோர் ஆண்டும் 85 ஆயிரம் H-1B விசாக்களை வழங்குகிறது; அவற்றில் பெரும்பாலானவை இந்திய நாட்டவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தொழில்நுட்பத் துறையினர், குறிப்பாக ட்ரம்பின் முன்னாள் நெருங்கிய கூட்டாளி இலோன் மாஸ்க் உள்ளிட்டோர், இந்த முடிவு அமெரிக்காவின் புத்தாக்க வளர்ச்சிக்கு தடையாக இருக்குமென எச்சரித்துள்ளனர்.
ஆனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் அமெரிக்கர்களின் சம்பளத்தை குறைக்காமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் அந்நடவடிக்கையைத் தற்காத்து பேசியுள்ளது.