
கோலாலம்பூர், ஜூலை 18 – மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நிக் ஆடம்ஸை ( Nick Adams) நியமிப்பது குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் அரசாங்கம் பல பொருத்தமான பரிசீலனைகளை மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
நிக் ஆடம்ஸைப் பொறுத்தவரை, எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நாங்கள் பல்வேறு செயல்முறையைப் பின்பற்றுகிறோம். இந்த விவகாரத்தில் நியாயமான அம்சங்களை அரசாங்கம் நிச்சயமாக பரிசீலிக்கும், அதே சூழ்நிலையில், மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நல்லுறவுகளையும் பாதுகாக்க வேண்டிள்ளது என புத்ரா ஜெயாவில் Presint 14 இல் Istiqial தொழுகை மையத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.
பழமைவாத வர்ணனையாளரும் எழுத்தாளருமான ஆடம்ஸ், மலேசியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக பரிந்துரைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். எனினும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்து ஆடம்ஸின் வேட்புமனுவை நிராகரித்தனர். இந்த நியமனம் நாட்டின் கண்ணியத்திற்கும், இறையாண்மை, வட்டார அமைதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன், குறிப்பாக பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையை நிலைநிறுத்தும் மலேசியாவின் வெளியுறவுக் கொள்கைக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் விவரித்தனர்.