
புத்ராஜெயா ஜூலை-21- அமெரிக்காவுடனான வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகளின் போது மலேசியா தனது பூமிபுத்ரா கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பொருளாதார வல்லரசுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மலேசியா எப்போதும் மதிக்கிறது; ஆனால் பேச்சுவார்த்தைகளில் தெளிவான எல்லைகள் அல்லது “சிவப்பு கோடுகள்” இருக்க வேண்டும் என்பதில் புத்ராஜெயா உறுதியாக உள்ளது என அவர் சொன்னார்.
“இது குறித்து அமைச்சரவை பலமுறை விவாதித்துள்ளது, ஆனால் எங்களுக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது, இதனால் வரக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அன்வார் கூறினார்.
“எங்கள் நாட்டின் தேசியக் கொள்கைகளில் தலையிடாதீர்கள் என்பதே அந்த சிவப்புக் கோடு என பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
பூமிபுத்ரா கொள்கை பாரபட்சமானது என்பதே அமெரிக்காவின் வாதம்; ஆனால் அது பாரபட்சம் என மலேசியா நினைக்கவில்லை. ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்கு நாடும் மக்களும் ஆதரவாக நிற்பதாக, புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் அன்வார் கூறினார்.
எனவே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூர் நிறுவனங்களுக்கான கொள்முதல் மற்றும் வாய்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக, நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
சந்தையை விரிவுபடுத்துவதற்காக, சீனா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளையில், மலேசியா தனது தேசிய நலன்களை உறுதியாக பாதுகாக்கும் என்றார் அவர்.
மலேசியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த வரி ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரவிருக்கிறது.