
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21 வயது அவ்வாடவர் குற்றம் சாட்டப்படுகிறார்.
அந்நபர் குறைந்தது இருவேறு மோசடி சம்பவங்களிலும் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
ஆகக் கடைசி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து தங்க நகைகள் மற்றும் காப்புகள் என மலேசிய ரிங்கிட்டுக்கு 233,000 பெறப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மோசடி, HSBC வங்கி அதிகாரி என்ற போலி அழைப்புடன் தொடங்கியது.
பின்னர், சட்டத்துறை அமைச்சின் அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர் பணச்சலவை விசாரணைக்கு உள்ளாகியுள்ளார் என பயமுறுத்தி, நகைகளைப் “பாதுகாப்பு” பெயரில் ஒப்படைக்கச் செய்தனர்.
இந்நிலையில், மலேசியர்களை இப்படி ‘runner’-களாகப் பயன்படுத்தும் மோசடி கும்பல்கள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, அரசு அல்லது வங்கி அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு அழைப்புகள் வந்தால், உடனே அதிகாரப்பூர்வ hotline அழைப்புச் சேவைகளில் சரிபார்க்க வேண்டும்.
பணம் அல்லது நகைகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது; சந்தேகமான அழைப்புகள் வந்தால், உடனடியாக போலீஸாரிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.



