
அய்ச்சி-நாகோயா, செப்டம்பர்-28,ஜப்பானில் நடைபெற்று வரும் அய்ச்சி-நாகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தற்காத்துக் கொண்ட தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி, உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுப்பதும் ஒலிம்பிக் தங்கம் வெல்வதுமே தனது அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
நாகோயா கிஞ்சோ புடோ அரங்கில் நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதியாட்டத்தில், இந்தியாவின் அனாஹத் சிங்கை (Anahat Singh) நேரடி செட்களில் வீழ்த்தி கெடாவைச் சேர்ந்த 27 வயதான சிவசங்கரி மலேசியாவின் 6-ஆவது தங்கப் பதக்கத்தை உறுதிச் செய்தார்.
இதன் மூலம், தேசிய அணி இம்முறை 6 தங்கப் பதங்கங்களை வெல்ல வைத்திருந்த இலக்கு நிறைவேறியது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் அவர் 2028 லோஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் தகுதிப் பெற்றுள்ளார்.
தற்போது உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, முதல் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய அழுத்தங்களைச் சிறப்பாகக் கையாண்டதாகக் குறிப்பிட்டார்.
நடப்புப் பருவத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 இடங்களுக்குள் நுழைவதையும், பின்னர் தரவரிசையின் உச்சியை அடைந்து மலேசியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றுத் தருவதையுமே தமது கனவாகக் கொண்டு கடினமாக உழைக்கப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.



