
வாஷிங்டன், மார்ச்-2-வாஷிங்டனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டு விட்டாலும், ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.
அனைத்து இலக்குகளும் அடையப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ளதே அதற்குக் காரணம்.
“எனவே அமெரிக்கத் தரப்பிலும் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்” என ட்ரம்ப் சொன்னார்.
இதுவரை 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், அமெரிக்க மத்திய கட்டளைத் தளமான CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர காவல்படை தலைமையகமான IRGC- யை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது, ‘விஷமுள்ள பாம்பின் தலைப் பிடுங்கப்பட்டது போல’ தலைநகர் தெஹ்ரானின் இராணுவக் கட்டமைப்புக்குக் கிடைத்த மரண அடி என CENTCOM வருணித்தது.
கடந்த 47 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, இந்த IRGC மையமே காரணம் என்றும் அது கூறிற்று.
இவ்வேளையில், ஈரானிய முன்னாள் அதிபர் Mahmoud Ahmadinejad, தெஹ்ரானின் வடகிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேல்–அமெரிக்க விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவரது பாதுகாவலர்களில் சிலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005 முதல் 2013 வரை ஈரானை வழிநடத்திய Ahmadinejad, இதுநாள் வரை அரசின் ஆலோசனை குழுவில் முக்கிய பங்காற்றி வந்தார்.
அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு, ஈரானின் முக்கிய இராணுவ தலைமையகம் அழிப்பு, முன்னாள் அதிபரின் மரணம் ஆகியவை மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
உலகத் தலைவர்கள் கவனமாகக் கண்காணித்து வரும் நிலையில், பரவலான வட்டார போர் உருவாகும் அச்சமும் அதிகரித்துள்ளது..



