
காஜாங் , மார்ச் 6- இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மானிய விலையில் சமையல் எண்ணெய் பொட்டலங்களை வாங்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
MYkasih திட்டத்தின் மூலம் அடையாள அட்டைகளின் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் செயல்முறையை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருவதால் இந்த வாய்ப்பு இருப்பதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் டத்தோ டாக்டர் புஷியா சாலே ( Fuziah Salleh ) தெரிவித்தார்.
இப்போதைக்கு, சமையல் எண்ணெய் மானிய பொட்டலங்கள் அவற்றை வாங்க தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இன்னும் QR குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள், அடையாள அட்டைகளை ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதுவரை தற்போதுள்ள நடைமுறை அமலில் இருக்கும் வாய்பு இருப்பதாக Fuziah விவரித்தார்.
மார்ச் 1 ஆம்தேதி முதல் வெளிநாட்டினர் மானிய விலையில் சமையல் எண்ணெய் வாங்குவது தடைசெய்யப்படும் என்று இதற்கு முன் உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்திருந்தார்.



