Latestமலேசியா

இனவாதமாக நடந்துகொண்ட கிராப் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கைத் தேவை – ஒருமைப்பாட்டு அமைச்சர்

கோலாலம்பூர், ஏப்ரல்-24- உணவு அனுப்பும் சேவைக்கான செயலி வாயிலாக இன – மதவாத கருத்துக்களை அனுப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதனை வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கில் grab food ஓட்டுநரான பெண்மணியிடமிருந்து ஓர் ஆசிரியைக்கு அதுபோன்ற தகவல் அனுப்பப்பட்ட சம்பவம் வைரலாகியிருப்பது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.

கண்டிப்பதாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; இது அநாகரீகமான செயல் மட்டுமல்ல, இன – மத நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து விடுமென அவர் சொன்னார்.

உணவு அனுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்களும் இது போன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்; நன்னடத்தைக் கோட்பாடுகளையும் கடுயைமாக்க வேண்டுமென நேற்று வெளியிட்ட அறிக்கையில் டத்தோ ஏரன் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளையில், அச்சம்பவம் குறித்து விசாரணைத் தொடங்கியிருப்பதை, செபராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹெல்மி ஆரிஸ் உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் கீழும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தான் ஆர்டர் செய்த உணவு வந்து சேராததால், ஓட்டுநருக்கு செயலி வாயிலாக தகவல் அனுப்பி கேட்ட போதே அமுதா என்ற அவ்வாசிரியருக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்து மதத்தைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் அந்த ஓட்டுநர் பெண்மணி அனுப்பிய தகவலை அமுதா சமூக ஊடகத்தில் பகிரவே, அது முன்னதாக வைரலானது.

போலீஸிலும் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிலும் அவர் புகார் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!