
குவாந்தான், செப்டம்பர் -24,
தஞ்சோங் லும்பூர் இரண்டாம் பாலம் அருகிலுள்ள இரு வழிச்சாலையில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட “basikal lajak” எனப்படும் சைக்கிள்களில் சிறுவர்கள் அபாயகரமான முறையில் சாகசங்களில் ஈடுபட்ட காட்சி வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வைரல் காணொளியில் நான்கு சிறுவர்கள் மேம்பாலத்திலுள்ள வளைவை மிகுந்த அபாயகரமான முறையில் சைக்கிளில் கடந்தனர் என்றும் அதில் இருவர் “சூப்பர்மேன்” சாகசம் செய்ததோடு, மற்ற இருவர் தங்கள் உடலை முழுவதுமாக தாழ்த்தி விட்டு சைக்கிள் ஓட்டியதும் தெளிவாகக் காண முடிந்தது.
இந்தக் காட்சியை பதிவு செய்த வாகன ஓட்டுநர், அவர்களின் பின் தொடர்ந்து செல்லும் போது மீண்டும் மீண்டும் ஹார்ன் அடித்தும், சிறுவர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இவ்வீடியோ வைரலானதையடுத்து, சமூக வலைதளங்களில் பெரும் அதிருப்தி கிளம்பியது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், குவாந்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர், அஷாரி அபு சமா, சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிறுவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.