
பாசீர் பூத்தே, அக்டோபர்-28, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் Shine Muscat வகைத் திராட்சைப் பழங்களில், நச்சை உண்டாக்கும் அளவுக்கு இரசாயனம் அதிகமாகக் கலக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது விசாரிக்கப்படும்.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு (Datuk Seri Mohamad Sabu) அவ்வாறு கூறியுள்ளார்.
அது தொடர்பில், மலேசியத் தனிமைப்படுத்தல் சேவை மற்றும் சோதனை அமுலாக்கத் துறை (Maqis), விவசாயத் துறையின் தாவர உயிரியல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை மேற்கொண்டு விசாரணை நடத்தும்.
எனினும் அது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என்றார் அவர்.
தாய்லாந்தில், தாங்கள் பரிசோதனை செய்த Shine Muscat திராட்சை மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக, அந்நாட்டு பூச்சிக்கொல்லி எச்சரிக்கைக் கட்டமைப்பு முன்னதாக அறிவித்திருந்தது.
இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாய்லாந்து பயனீட்டாளர் சங்கமும் அந்நாட்டரசை வலியுறுத்தியது.