
கோலாலம்பூர் – ஜூலை-27 – இலங்கை சக்தி தொலைக்காட்சியின் The Crown Season 2 அனைத்துலகப் பாடல் திறன் போட்டியில் பங்கேற்க, 2 மலேசியர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சக்தி TV-யின் பிரதிநிதியாக மலேசியாவிலிருந்து பங்கேற்பாளர்களைத் தேர்வுச் செய்து வணக்கம் மலேசியா அனுப்பியிருந்தது.
அவ்வகையில் சிலாங்கூர் செலாயாங்கைச் சேர்ந்த 27 வயது பொறியியலாளர் குருமூர்த்தி ராவ் திரிநூர்த்தி ராவ், பேராக் ஈப்போவைச் சேர்ந்த 29 வயது வங்கியாளர் யோஷினி மதியழகன் இருவரும், இந்த சர்வதேச திறமைகளின் சங்கமத்தில் மேடையேறுகின்றனர்.
இலங்கைப் போட்டியாளர்களோடு, இந்தியா- இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ள போட்டியாளர்களுடனும் இவ்விருவரும் சவாலில் இறங்குகின்றனர். 15 வயதுக்கும் மேற்பட்ட திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மேடையை உருவாக்கித் தருவதே இப்போட்டியின் நோக்கமாகும்.
குருமூர்த்தி – யோஷினி இருவரும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தங்களது திறமையை நிரூபித்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறி மலேசியாவுக்குப் பெருமைச் சேர்க்க வாழ்த்துவோம்.
இப்போட்டி அனைத்துலக ரீதியிலானது என்பதால் நேயர்களும் வாக்களிக்க முடியும். இது குறித்த மேல் விவரங்களை சக்தி தொலைக்காட்சி விரைவிலேயே அறிவிக்கும்.