
கோலாலம்பூர், டிசம்பர்-4 – கல்வி அமைச்சு இவ்வாண்டு நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 13,749 புதிய ஆசிரியர்களை வேலைக்கமர்த்தியுள்ளது.
அக்டோபர் 31 வரைக்குமான நிலவரப்படி, ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணியமர்வு 97.62 விழுக்காடாகவும் இடைநிலைப் பள்ளிகளில் 95.16 விழுக்காடாகவும் இருப்பதாக, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) மக்களவையில் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடங்களையும், அந்த பணியமர்வு கருத்தில் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள பள்ளிகளில் 20,000 ஆரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக, NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கடந்தாண்டு செப்டம்பரில் கூறியிருந்தது.
மற்றொரு நிலவரத்தில், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக வரையப்பட்ட 7 அம்சத் திட்டங்களும் முழுமையாக அமுலுக்கு வந்திருக்கின்றனவா என்பதை கண்டறிய, அமைச்சின் அதிகாரிகளை ஃபாட்லீனா உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் கற்றலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போட்டிகள், கொண்டாட்டங்கள் அல்லது விழாக்களை நிறுத்துவதும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.