
கோத்தா பாரு, ஜூலை-4 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்பான விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை முடக்க, MACC நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்.
அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்மாயில் சப்ரி அதனை எதிர்த்தால் வழக்கு விசாரணை நடைபெறும்; ஒருவேளை MACC-யின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மொத்த சொத்தும் அரசுடைமையாகும் என்றார் அவர்.
MACC-யிடம் அறிவித்த சொத்துக்கள் தொடர்பில் அந்த முன்னாள் பிரதமர் முன்னதாக பல முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.
பஹாங், பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஊழல் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
2021 முதல் 2022 வரை 9-ஆவது பிரதமராக இருந்த போது அவர் அறிமுகப்படுத்திய ‘கெலுவார்கா மலேசியா’ திட்டத்திற்கான விளம்பர நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் பணத்தில் ஊழல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு வழங்கிய ‘மை கியோஸ்க்’ கட்டுமான குத்தகையில் ஊழலோ முறைகேடோ கண்டறியப்படவில்லை.
அது குற்றவியல் விசாரணை அல்ல; மாறாக, நிர்வாக நடைமுறை தொடர்பான விசாரணையே.
விசாரணையின் முடிவில், செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவும் பரிந்துரைகள் அமைச்சிடம் வழங்கப்படும் என, அசாம் பாக்கி சொன்னார்.
‘மை கியோஸ்க்’ விவகாரத்தில் குற்றவியல் அம்சங்கள் இருப்பது போன்றதொரு குழப்பம் நிலவி வருவதை மறுத்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.