
தெஹ்ரான், ஜூன்-14 – இஸ்ரேலின் நேற்றையத் தாக்குதல் ‘அலை’ உண்மையில் ஒரு போர் பிரகடனம் என ஈரான் வருணித்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது;
இஸ்ரேலியின் இரு பெரும் நகரங்களான ஜெருசலம் மற்றும் டெல் அவிஃப்பில் ஈரான் குண்டு மழை பொழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இஸ்ரேல் முழுவரும் சைரன் அபாய ஒலி எழுப்பப்பட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
100-க்கும் குறைவான ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடமறிக்கப்பட்டன அல்லது இலக்கிலிருந்து விலகி போய் விழுந்ததாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.
அதே சமயம், ஈரானின் சில ஏவுகணைகளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்பட்டது.
ஈரானின் இந்த பதில் தாக்குதலில் குடியிருப்புகள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இருவர் படுகாயம் அடைந்து, 8 பேர் நடுத்தரமாகவும், 34 பேர் சிராய்ப்புக் காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
முன்னதாக, இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களால் “கசப்பான மற்றும் வேதனையான” பதிலடியை அது எதிர்கொண்டாக வேண்டுமென, ஈரானின் உச்ச அதிகாரம் கொண்ட தலைவர் அயத்தொல்லா அலி கமேனி எச்சரித்தார்.
இவ்வேளையில், தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால் “இன்னும் கொடூரமான” தாக்குதல்கள் ஏற்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை எனக் கூறிய டிரம்ப், எனவே அமெரிக்கப் படைகள் மீதோ அல்லது நலன்களையோ தாக்க வேண்டாம் என்றும் ஈரானை எச்சரித்தார்.
ஆனால் தெஹ்ரானோ, “விளைவுகளுக்கு வாஷிங்டன் பொறுப்பேற்க வேண்டும்” என கூறியுள்ளது.