
ஈப்போ, செப்டம்பர்-25-ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் அவசர படிக்கட்டு அருகே மூன்று மாடிகளிலிருந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைவர் ACP நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட அவரை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பின்தொடர்ந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 60 முதல் 70 வயதுடையவராகக் கருதப்படும் அவ்வாடவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.
தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின்போது சிவப்பு நிற அரைக்கை சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்த அடையாளம் தெரியாத அம்முதியவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது குடும்பத்தினர் உடனடியாகப் போலீஸைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



