Latestமலேசியா

ஈப்போவில் பரத கலாஞ்சலி மாணவர்களின் ‘நாட்டிய சேவா’ நிகழ்ச்சி – அறிவுத்திறன் குறைபாடுடையோருக்கு RM10,000 நன்கொடை

ஈப்போ, ஜூன் 11 – ஈப்போவில் பரத கலாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவர்களின் “நாட்டிய சேவா” என்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, தமிழர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில்
பேராக் மாநில கலை பண்பாட்டு இலாகா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிதி திரட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம் , பேராக் மாநிலத்தில் அறிவுசார் குறைபாடுடைய சுமார் 500 மாணவர்களுக்கு சேவை செய்து வரும் Perak Association for Intellectually Disabled (பேராக் மாநில அறிவுத்திறன் குறைபாடுடையோர்) அமைப்பிற்கு 10,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பரதநாட்டியம் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று மட்டும் அல்ல , அது தமிழர் இனத்தின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு உயரிய கலை.

அந்த அடிப்படையில் இந்த ‘நாட்டிய சேவா’ நிகழ்ச்சி மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் க. நாச்சிமுத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

சமூக நல அமைப்புகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நன்கொடை அவர்களின் சேவைகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார். பரத கலாஞ்சலி நாட்டிய பள்ளியின் ஆசிரியை மீரா வேணுகோபால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஐந்து நாட்டியக் கலைஞர்கள் சிறப்பான நடனங்களை அரங்கேற்றி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!