
தெஹ்ரான், ஜூன்-11 – ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரான் மீது ‘கடுமையான’ தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் இந்த புதிய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்குப் பதிலடியாக, அனைத்துலக அளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் Hormuz நீரிணையில் சென்ற கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
பஹ்ரேய்ன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் ஈரான் குறி வைத்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பதற்றத்தில் Hormuz நீரிணையை ஈரான் மூடியுள்ளதாக அறிவித்துள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



