Latestமலேசியா

உணவக ஊழியரிடம் சோதனை நடத்துவதாக நடித்து கை தொலைபேசியை எடுத்துக் கொண்டு தப்பியோடிய ஆடவன்

ஷா அலாம், ஏப் 14- ஷா அலாமில் ஒரு பேரங்காடி வளாகத்திலுள்ள துரித உணவுக் கடையின் ஊழியரை சோதனையிடுவதுபோல் நடித்து அவரது கை தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பியோடிய ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த இந்த விநோத திருட்டில் உணவக ஊழியர் ஒருவர் தனது கை தொலைபேசியை பறிகொடுத்ததோடு சந்தேக நபர் கை தொலைபேசியுடன் அக்கடையிலிருந்து தப்பியோடும் காணொளி வைரலானது.

இச்சம்பவம் குறித்து உணவக ஊழியர் போலீசில் புகார் செய்திருப்பதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.

செத்தியா அலாம் பகுதியிலுள்ள பேரங்காடி வளாகத்திலுள்ள உணவக ஊழியர் இந்த திருட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அந்த உணவகத்தில் உணவக ஊழியர்களை பரிசோதிக்கும் நோக்கில் புகார்தாரரிடம் பல கேள்விகளைக் கேட்பது ரகசிய கண்காணிப்பு கேமராவில் தெரிகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையில் ராம்சே எம்போல் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், உணவக ஊழியர் தொடர்புடைய குறிப்புகளை பார்ப்பதற்காக புகார்தாரரின் கைபேசியை இரவல் வாங்கும் தந்திரத்தையும் சந்தேக நபர் கையாண்டாதோடு , புகார்தாரர் கைத்தொலைபேசியை ஒப்படைத்ததும் அந்த சந்தேக நபர் உடனடியாக அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினான்.

இந்த விவகாரம் தண்டனை சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பியோடிய நபர் பிடிபட்டு அவனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!