
புது டெல்லி, மார்ச்-1 – இந்தியாவின் பனி பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில், குறைந்தது 41 பேர் இன்னமும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா.
இங்கு தான் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவியும் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் உள்ளது.
அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலை அமைப்புத் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம் புதைந்தது.
அதில், 8 கொள்கலன்கள் மற்றும் கூடாரங்களில் இருந்த 57 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா்.
அவர்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.
இதுவரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு அபாயத்தால் மீதமுள்ள 41 பேரை மீட்கும் பணி சவாலானதாக உள்ளது.
போதாக்குறைக்கு, தொழிலாளர்களின் கொள்கலன்கள் சுமாா் ஏழு அடிக்கு கீழே பனியில் புதைந்துள்ளன;
மீட்புப் பணி வெள்ளிக்கிழமை இரவில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.