
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக் காத்திருந்த வாடகை கார் ஓட்டுநர் வெளிநாட்டவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது இடது கால் நிரந்தராங்க செயலிழந்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்ட அந்நபர், தான் பயணிகளுக்காக காத்திருக்கும்போது மியன்மார் மற்றும் நேபாளத்தைச் சார்ந்த 6 வெளிநாட்டவர்கள் தன்னை அணுகியதாகவும், கெட்ட வார்த்தைகளில் தன்னைத் திட்டியதால் சிறு வாய்ச்சண்டை ஏற்பட்டது என்றும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், அந்த அறுவரில் ஒருவர், தன்னுடைய குழுவினரை அவ்விடத்தை விட்டு நகர சொல்லி விட்டு தன்னிடம் நெருங்கியபோது, எதிர்பாரா வண்ணமாக கத்தியால் வயிற்றில் குத்தியதாகவும் கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாகவும் பாதிக்கப்பட்ட ஆடவர் கூறியுள்ளார்.
இந்த கத்தி குத்து சம்பவத்தில், தனது இடது கால் முழுமையாக செயலிழந்து விட்டதை அறிந்து அந்நபர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் தனது குடுமபத்தின் எதிர்காலத்தை எண்ணி கவலையுற்றிருப்பதும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் தகவல் அறிந்த போலீசார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு ஆண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.