Latestமலேசியா

எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு; MP-களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வெளியீடு

கோலாலம்பூர், செப்டம்பர் -17, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) நகல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

அதற்கு ஆதாரமாக அவ்வொப்பந்தத்தின் 2 முன்வரைவுகளை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் (Datuk Seri Fadhillah Yusof) வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் (Datuk Seri Hamzah Zainuddin) முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை தானா என்பதை, பொது மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றார் அவர்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்தவும், அமைதியான மற்றும் இணக்கமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கிலுமே அந்த MoU வரையப்பட்டதாக ஃபாடில்லா சொன்னார்.

பெரிக்காத்தான் நேஷனல் MP-ள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும், பொது வாழ்வின் 7 கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும், 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து நிந்தனைக்குரிய கூற்றுகளைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள், துணைப் பிரதமர் வெளியிட்ட நகல்களில் கூறப்பட்டுள்ளன.

அந்த MoU-வில் PN MP-கள் கையெழுத்திட்டால், நடப்பு 15-ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை அது அமுலில் இருக்கும்.

எனினும், நடப்பு நாடாளுமன்ற தவணை முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தை PN MP-கள் ஆதரிக்க வேண்டுமென்ற நிபந்தனை எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

மலேசிய சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே அந்த MoU வரையப்பட்டுள்ளது.

அதோடு, எந்த அதிகாரப்பூர்வ இரகசியப் பிரிவின் கீழும் அது வரவில்லை என ஃபாடில்லா சொன்னார்.

அந்த MoU நகல், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது, கலாச்சார-நன்னெறி-மத அம்சங்களுக்கு எதிரானது, அதிகார துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால், அதை நிராகரிப்பதாக ஹம்சா முன்னதாகக் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!