
ஜோகூர், செப்டம்பர் 18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் (Iskandar Puteri) சாலைத் தடுப்பின்போது, எதிர்திசையில் Porsche காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற 43 வயது நபர் ஒருவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
ஜாலான் இஸ்மாயில் சுல்தானில் கிலோமீட்டர் 6.5 பகுதியில் நடைபெற்ற சாலைத் தடுப்பை கடந்து, அந்த நபர் காரை எதிர்திசையில் ஓட்டிச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவிய 12 விநாடி காணொளி மூலம் தெரியவந்துள்ளது. அதில், வெள்ளை நிற Porsche கார் ஆபத்தான முறையில் எதிரோட்டத்தில் செல்வது பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் நேற்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல் தலைமையகத்தில் சரணடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்ததாக மாவட்ட காவல்துறையின் இடைக்காலத் தலைவர் சைஃபுல்லா ஜெயா @ யஹாயா (Superintendan Saifullah Jaya@Yahaya) தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுநர் உரிமமும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படலாம்.



