Latestமலேசியா

ஏக்குவாடோரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின் போது சிலுவை விழுந்து பாதிரியார் உயிரிழப்பு

குவாயாகில், அக்- 19-ஏக்குவாடோரின் Guayaquil நகரில், நேரலையாக ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின்போது பெரிய மரச் சிலுவை விழுந்ததில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயமொன்றின் பலிபீடத்தின் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த அந்த மரச் சிலுவை திடீரெனக் கழன்று விழுந்ததில் அப்பாதிரியார் படுகாயமடைந்தார்.

தேவாலயத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் திருப்பலி நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒளிபரப்பின் சுமார் 27ஆவது நிமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. சிலுவை விழுந்ததைத் தொடர்ந்து திருப்பலி உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்ததுடன், பாதிரியாருக்கு உதவவும் முயன்றனர்.

எனினும், மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பே பாதிரியார் பலத்த காயங்களால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது மரணத்தை உறுதிப்படுத்திய சம்பந்தப்பட்ட தேவாலயம், அவரது குடும்பத்தினருக்கும் அவர் பணியாற்றிய தேவாலயச் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

இவ்வேளையில், சிலுவை விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!