Latestமலேசியா

கடந்தாண்டு பதிவான 7,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகளில் 104 சம்பவங்கள் மனைவிகளை உட்படுத்தியவை

கோலாலம்பூர், ஜூலை-7-கடந்தாண்டு நாட்டில் மொத்தம் 7,391 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 104 சம்பவங்களில் மனைவிகள் வன்முறையைப் புரிந்தவர்களாக இருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

இனம், பாலினம் அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்து, அனைத்து வகையான குடும்ப வன்முறைச் சம்பவங்களையும் அமைச்சு தீவிரமாகக் கருதுவதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ Nancy Shukri தெரிவித்தார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தவும் அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமூக நலத் துறை, பெண்கள் மேம்பாட்டுத் துறை, தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம், தேசிய நல அறக்கட்டளை ஆகியவை அவற்றில் அடங்கும். உடனடி நடவடிக்கைகளில் அவசரகாலப் பாதுகாப்பு உத்தரவும் ஒன்றாகும்.

இதற்கு காவல் துறை அறிக்கை இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம். சமூக நலத்துறையால் இரண்டே மணி நேரத்திற்குள் இது செயல்படுத்தப்படும் என Nancy Shukri கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை, தற்காலிகத் தங்குமிடம் மற்றும் உளவியல் சமூக ஆதரவைப் பெற வகை செய்யும் அந்த பாதுகாப்பு உத்ததவாதத்தைத் தவிர்த்து வன்முறைக்கு எதிரான பெண்களின் நல்வாழ்வு விழிப்புணர்வுத் திட்டம், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர்கொண்ட தாக்கங்களைச் சமாளிக்க உதவும், ‘K-Chat’ எனும் உளவியல் ரீதியான ஆதரவு, தந்தைமைப் பொறுப்பு விழிப்புணர்வு, உணர்ச்சிகளைக் கையாளும் வழிமுறைகள், இணக்கமான முறையில் முரண்பாடுகளைத் தீர்த்தல், மனநலனைப் பேணுவது மீதான குடும்ப ஆலோசனைச் சேவைகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் சுட்டிக் காட்டினார்.

பாலினம் அல்லது பாதிக்கப்பட்டவர் எவராக இருந்தாலும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு என்பது விரிவான, அனைவரையும் உள்ளடக்கியது என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!