கிள்ளான், அக்டோபர்-21, 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட உத்தேச வீட்டுக் காவல் சட்டம் குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 20,000 கைதிகளை உட்படுத்தியிருக்கும்.
முதல் தடவை குற்றமிழைத்து, கடுமையானத் தண்டனையை ப் பெறாதவர்களை அதிலடங்குவர் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சிறு சிறு குற்றங்கள் அதாவது வறுமையில் வாடும் தனித்து வாழும் தாய், பிள்ளைகளின் பசியைப் போக்க பால் மாவு திருடியது, நோயாளிகள் மற்றும் வயதானவர்களை அது உள்ளடக்கும்.
அப்படிப்பட்ட 20,000 குற்றவாளிகளை நாம் பரிசீலிப்போம்.
ஆனால் முதல் முறை குற்றவாளியாக இருந்தும் சிறையில் கட்டொழுங்கு சரியில்லையென்றால் கண்டிப்பாக அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
அந்தளவுக்கு கடுமையான தணிக்கை நடைபெறும் என்றா அவர்.
வீட்டுக் காவல் என்பது, வீடு, காப்பகம், தொழிலாளர் குடியிருப்பு போன்ற பொருத்தமான இடங்களில், சிறைவாசத்தை அனுபவிப்பதாகும்.
நாட்டிலுள்ள 43 சிறைச்சாலைகளிலும் நெரிசல் பிரச்னை மோசமாகியிருப்பதாலேயே, அந்த வீட்டுக் காவல் சட்டத்தை இயற்ற உத்தேசிக்கப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.
மொத்தமாக 74,000 சிறைக்கைதிகளை மட்டுமே அங்கு வைத்திருக்க முடியுமென்ற நிலையில், நடப்பில் 82,000 கைதிகளால் நமது சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதை அவர் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஜ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் வீட்டுக் காவல் ஏற்கனவே அமுலில் உள்ள ஒன்றுதான் என அவர் சுட்டிக் காட்டினார்.