
கங்கார், ஏப்ரல்-9, தனது 11 வயது மகளை, கத்தரிக்கோலை பயன்படுத்தி தாக்கியது உட்பட உடல் ரீதியாக துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு பெண்ணை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
33 வயது அப்பெண் நேற்று மதியம் 1.30 மணியளவில் கெடாவின் ச்சாங்லூனில் தனது நண்பரைப் பார்க்கச் சென்றபோது கைதானார்.
கங்கார் போலீஸ் தலைவர் துணை ஆணையர் யுஷாரிஃபுடின் மொஹமட் யூசோப் அதனைத் தெரிவித்தார்.
ஜித்ராவில் அச்சிறுமி படிக்கும் ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரால் அக்கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அடிக்கடி பள்ளிக்குத் தாமதமாக வந்ததால் சந்தேகம் கொண்டு அச்சிறுமியை தலைமையாசிரியர் விசாரித்துள்ளார்.
அவர் தான் அது குறித்து போலீஸிலும் புகார் செய்ததாக யுஷாரிஃபுடின் சொன்னார்.
கங்கார் துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனையிடமிருந்து கிடைக்கப் பெற்ற மருத்துவ அறிக்கையின் படி, அச்சிறுமியின் கழுத்து, முதுகு, கால்கள், கைகளில் கடித்தது முதல் மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட காயங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதான கொடுமைக்கார தாயிடமிருந்து 12 சென்டி மீட்டர் நீளமுள்ள 1 ஜோடி கத்தரிக்கோல் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக ஏப்ரல் 11 வரை அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.