
பெங்களூரு – ஜூலை-20 – தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ரஷ்யா நாட்டு மாது ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ஒரு சிறு குகையின் உச்சியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகள் மத்தியில் பிரபலமான ராம்தீர்த்த குன்றில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கண்களில் அம்மூவரும் சிக்கினர்.
நிலச்சரிவு நிகழும் அபாயமிக்க அக்குகைப் பகுதியில் Nina Kutina எனும் 40 வயது அம்மாது, 4 மற்றும் 6 வயதிலான 2 பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
போலீஸ் கேட்டதற்கு, தியானம் செய்வதற்கும், நகர வாழ்க்கையிலிருந்து தள்ளியிருக்கவுமே, குகையில் வசித்து வருவதாக அம்மாது கூறிக் கொண்டார். எனினும், அச்சூழல் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லையென கவலைத் தெரிவித்த அதிகாரிகள், அதனை Nina-விடம் விளக்கி புரிய வைத்தனர்.
ஒருவழியாக சமாதானமான அம்மாதுவையும் 2 பிள்ளைகளையும் போலீஸார் பாதுகாப்பாக மலையடிவாரம் கூட்டி வந்தனர். பின்னர் Nina கேட்டுக் கொண்டதற்கிணங்க பெண் சாமியார் ஒருவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் அம்மூவரும் சேர்க்கப்பட்டனர்.
போலீஸாரின் விசாரணையில், 2018- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த Nina, பெர்மிட் காலத்தையும் தாண்டி தங்கியுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும் 2 பிள்ளைகளையும் ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப பெங்களூரு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.