Latestமலேசியா

கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து

கலந்துரையாடலே தீர்வு, கோயில் இடிப்பு அல்ல; அரசாங்கத்துக்கு இந்து சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-10,

_”மற்றவர் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான எந்தவொரு அமுலாக்க நடவடிக்கையும் நியாயமாகவும், மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்”_ என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சட்டவிரோத கோவில்கள்” குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த கடுமையான நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கையில், சங்கத் தலைவர் தங்க கணேசன் அவ்வாறுக் கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டமானது சமயச் சுதந்திரத்தை உறுதிச் செய்வதை புத்ராஜெயாவுக்கு நினைவுறுத்த விரும்புவதாக அவர் சொன்னார்.

பல இந்து கோவில்கள் சட்ட அனுமதி பெறாததற்கு காரணம் சமூகத்தினர் சட்டத்தை மீற விரும்பியதல்ல; மாறாக வரலாற்று குறைபாடுகள், நில உரிமை மாற்றங்கள், மற்றும் முந்தைய நிர்வாகங்களின் தவறான கையாளுதலே என்றார் அவர்.

முன்னதாக பிரதமர் அன்வார், ‘சட்டவிரோதக்’ கோவில்களின் கட்டுமானத்தைத் தற்காத்து பேசுவோர், அதனை எதிர்ப்பதாக் கூறிக் கொண்டு சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வோர் என இரு தரப்பையுமே சாடியிருந்தார்.

_”சமய சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் மரத்தடியில் எல்லாம் கோவில்கள் கட்ட அனுமதிக்க முடியாது. எனவே சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களை இடித்துத் தள்ள ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக”_ அன்வார் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கணேசன், பல கோவில்கள் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டவை, அவை வழிபாட்டு இடங்களாக மட்டுமல்லாமல் கலாச்சார மற்றும் அடையாள மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன என்றார்.

எனவே _“நிர்வாக நடவடிக்கைக்கு முன் மனிதாபிமான பார்வையும் தேவை”_ என அவர் வலியுறுத்தினார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கோவில் _town hall_ கூட்டத்தில், கோவில்களைச் சுற்றியுள்ள பிரச்னைகளுக்கு முழுத் தீர்வளிக்கும் அறிக்கையை இந்து சங்கம் பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்ததையும் தங்க கணேசன் சுட்டிக் காட்டினார்.

அதில், கோவில் விவகாரங்களை ஒருங்கிணைக்கும் தனி அமைப்பை உருவாக்கும் பரிந்துரையும் இடம்பெற்றிருந்தது.

பிரதமர் துறையின் நேரடி பார்வையில், மலேசிய இந்து சங்மும் மற்ற இந்து அமைப்புகளும் நிர்வகிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

எனவே, அந்த அறிக்கையை மத்திய-மாநில அரசாங்கங்கள் பரிசீலித்து கலந்துரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் கணேசன் கேட்டுக் கொண்டார்.

நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் பாதுகாக்கப்படவும், சட்டப்பூர்வமாக நிர்வகிக்கப்படவும், அவற்றின் மரியாதைக் கட்டிக் காக்கப்படவும் ஏதுவாக, ‘மலேசியா மடானி’ கொள்கையின் கீழ் அரசாங்கம், ஊராட்சி மன்றங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புடனும் இந்து சங்கம் அணுக்கமாக ஒத்துழைக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!