
காஜாங், செப்டம்பர்-29,
சிலாங்கூர், காஜாங், ஜாலான் ஆலாம் சாரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கு காரணமான வெள்ளை நிற பெரோடுவா மைவி கார் ஓட்டுநரை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிற்பகல் 1.30 மணியளவில், அந்த மைவி கார் பல வாகனங்களை ஆபத்தாக முந்திச் சென்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
மோதிய கையோடு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
அவரை அடையாளம் காணும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் 1987 போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் RM5,000 முதல் அதிகபட்சம் RM15,000 வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்விபத்தின் வீடியோக்கள் முன்னதாக வைரலாகி, சமூக வலைத்தாளவாசிகளின் கவனத்தைப் பெற்றன.