
காப்பார் தம்பாஹான் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கோயில் இடமாற்றம்; வனத்துறை நடவடிக்கை
கப்பார், பிப்ரவரி-19,
சிலாங்கூரில் காப்பார் தம்பாஹான் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோவிலுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Ops Risi எனப்படும் அச்சிறப்பு நடவடிக்கை மாநில வனத்துறை மற்றும் போலீஸ் உள்ளிட்ட அமுலாக்க நிறுனங்களின் ஒத்துழைப்புடன் சுமூகமாக நடைபெற்றது.
கோவில் பொருட்கள் மற்றும் சிலைகளுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாத வகையில் அவை முதலில் மரியாதையுடன் அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானம் இடிக்கப்பட்டது.
இந்நடவடிக்கை தொழில்முறையாகவும் , மத உணர்வுகளை மதித்தும் மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் வனத்துறையின் மூத்தத் துணை இயக்குநர் Mohd Shafie Mahamud கூறினார்.
முதலில், கட்டுமானம் உடைப்படாமல் அதனைத் தற்காக்க முயன்றாலும், கடைசியில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு கோயில் நிர்வாகம் உரிய ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் சொன்னார்.
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியின் வளத்தை உறுதிச் செய்வதும், அத்துமீறலைத் தடுப்பதும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதும் வனத்துறையின் கடமை என அவர் கூறினார்.
மாநிலத்தின் இயற்கைச் செல்வத்தை காக்க தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.



