
ஜாசின், ஏப் 1 – செலாண்டார் புக்கிட் செங்கே (Bukit Senggeh ) வில் ஒரு காரைச் சேதப்படுத்தி
அதன் ஓட்டுனரைத் தாக்கிய தனிப்பட்ட நபரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதோடு அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மார்ச் 26 ஆம் தேதி மாலை மணி 3.34 அளவில் சாலையோரத்தில் நடந்த அந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாகியதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் Superitenden லீ ரோபர்ட் ( Lee Robert) தெரிவித்தார்.
கோபம் அடைந்த ஆடவர் ஒருவர் தன்னைத் தாக்கியதோடு காரையும் சேதப்படுத்தியது தொடர்பில் 35 வயதுடைய ஆடவரிடமிருந்து செலன்டார் போலீஸ் நிலையம் புகாரைப் பெற்றுள்ளது.
தனது வாகனத்திற்குப் பின்னால் ஒரு நபர், கட்டுப்பாட்டை இழக்கப்போவது போல சந்தேகத்திற்கிடமான முறையில் நீல நிற யமஹா லஜெண்டா மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததைக் கவனித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் புகார்தாரர் தனது புகாரில் தெவித்திருப்பதாக லீ ரோபர்ட் கூறினார்.
சந்தேக நபர் வலதுபுறமாகத் திரும்பியபோது, புகார்தாரர் ஜன்னலைத் திறந்து அந்த நபரைத் திட்டினார்.
அதனால் கோபம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புகார்தாரரின் வாகனத்தை நோக்கிச் சென்று காரின் கதவு மீது தலைக்கவசத்தால் தாக்கியதோடு காரின் கதவையும் ஜன்னலையும் அடித்துள்ளார்.
பின்னர் புகார்தாரர் தனது வாகனத்திலிருந்து வெளியே வந்தபோது, தலைக்கவசத்தை வீசியதால் அது அவரது வலது கையில் பட்டு, சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
குழந்தைகளுடன் வாகனத்தில் இருந்த புகார்தாரரின் மனைவி, இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்ய செய்தபோதிலும் , அவர்கள் பதற்றமான நிலையில் இருந்ததால், அந்தப் பதிவு தெளிவாக இல்லையென லீ ரோபர்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



