
புத்ராஜெயா, மே-14-கிரீஸ் நாட்டின் காஸ்டெல்லோரிசோ (Kastellorizo) கடல் பகுதியில் நிகழ்ந்த கப்பல் விபத்தில் சிக்கிய 5 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மலேசியர்கள் கிரீஸ் நாட்டு கடலோர போலீஸ்காரர்களால் மீட்கப்பட்டதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.
அவர்கள் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளான நிலையில், மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தை ரூமேனியாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கவனித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்டவர்களின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இது குறித்த மேல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



