
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14-அரசாங்கத்தின் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் SARA உதவித் திட்டத்தை, பழங்கள், காய்கறிகள் மற்றும் புதிய புரதச் சத்து உணவுகளுக்கும் விரிவாக்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹித் ஹமிடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான வாழ்க்கைச் செலவினங்களுக்கான தேசிய நடவடிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
தற்போது ரொட்டி, முட்டை உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
இதை விரிவாக்குவதன் மூலம், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் சத்தான உணவுகளைப் பெற முடியும் என சாஹிட் சொன்னார்.
மேலும், எளிய மக்களுக்கான மானிய விலை அரிசி திட்டம் மற்றும் தனியார் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.



