
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30,
கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
2024 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரை கெடா, குவாலா மூடா, கம்போங் சுங்கை டிவிஷன் எனும் முகவரியில் ‘Geng Rames’ கும்பல் மூலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தமிழில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, 24 முதல் 42 வயதிலான அவர்களிடம் குற்ற வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
20 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை; வழக்கு ஜனவரி 29-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, பினாங்கு மற்றும் கெடாவில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய Gang Rusa Boy வன்முறை கும்பலை போலீஸார் முறியடித்துள்ளதாக, புக்கிட் அமான் அறிவித்திருந்தது..
முன்பு Gang 35 என அறியப்பட்ட அக்கும்பல் G. R. ரமேஸ் என்பவரின் தலைமையில் 2020 முதல் சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் பினாங்கின் சில இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.
அனைவருக்குமே, கொலை, கும்பலாகக் கொள்ளையிடுதல், சுடும் ஆயுதங்கள் பயன்படுத்தியது, மோசமான காயங்களை ஏற்படுத்தியது, போதைப்பொருள் கடத்தியது என பழையக் குற்றப்பதிவுகள் இருப்பதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறியிருந்தார்.



